Home
இமயம் – 2

கீ ஆலயம். (Key Monastery)

ஸ்பிடி பள்ளத்தாக்கில் உள்ள அற்புதமான ஆலயம். உண்மையை சொல்வதென்றால், இந்த கீ monastery தான் எனது ஸ்பிடி பயணத்திற்கு தூண்டுதலாக இருந்தது எனலாம். வருடம் ஒருமுறை லடாக் சென்று கொண்டு இருந்த என்னை சற்று மாற்றி சிந்திக்க செய்தது இந்த ஆலயம் தான். 2011 கோடையில் டெல்லியில் இருந்து கிளம்பினேன்.

இந்த முறை நான் பஸ் பயணம் என்று முடிவு செய்து விட்டதால் மோட்டார் பைக் எதுவும் எடுக்கவில்லை. முதலில் டெல்லி டூ மனாலி(700 ரூ) – மாலை பஸ் பிடித்து அடுத்த நாள் காலை மனாலி வந்தாலும் உடனே காஸா செல்ல முடியவில்லை (ஸ்பிடி பள்ளத்தாக்கின் தலைநகரம்). மனாலி – காஸா பயணம் மிக நீண்ட ஒன்று. ஒரு பஸ் காலை 4 மணிக்கும், கடைசி(!) பஸ் 5.30க்கும் என்று ஆகிவிட்டதால் என்னால் உடனே செல்ல முடியவில்லை. அதனால் பழைய மனாலியிலேயே தங்கினேன். (மனாலி பற்றி தனிப் பதிவு அப்புறம் பார்க்கலாம்)

3

பெரும்பாலும் நான் பஸ்ஸில் செல்லும் போது (இமயமலையில்) அதன் மேற்புறத்தில் அமர்ந்து செல்வது என்பதை வாடிக்கையாக வைத்திருந்தேன். என்ன கொஞ்சம் கண்டக்டரை கவனிக்க வேண்டும் மற்றும் செக் போஸ்ட் வரும் முன் இறங்கி உள்ளே அமர்ந்து கொள்ள வேண்டும். வழியில் ராணுவ வீரர்கள் பார்த்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். இந்த முறை என்னுடன் பயணம் செய்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களும் சிறிது தூரம் கூரையின் மேற்பரப்பில் அமர்ந்தபடி வந்தனர்.

இமயத்தை 360 டிகிரியிலும், 0 டிகிரியிலும் பார்த்து அனுபவிப்பது என்பது சுகானுபவம். நாடு, மதம், இனம், மொழி என்று அனைத்தும் மறந்து அங்கு உள்ளது நீங்களும் இமயமும் தான். இந்த முறையும் தனியாகவே பயணம் செய்ததால் அவ்வளவாகப் பேசவில்லை. அமைதி, அமைதி மற்றும் அமைதி மட்டுமே.

எனது பயண இஸ்ரேலிய நண்பர்கள் அன்று சனி இரவு என்பதால் அவர்களின் Sabbath இல் சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர். இங்கு இஸ்ரேலியர்களைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். ஸ்பிடியில் அவர்களுக்கு ஒரு மத நம்பிக்கை இடம் உள்ளது என்ற விஷயம் என்னை ஆச்சரியப்படுத்தியது. பொதுவாக லடாக்கில் நிறைய இஸ்ரேலியர்களைப் பார்த்து இருக்கிறேன்; ஆனால் ஸ்பிடியில் அவர்கள் எண்ணிக்கை மிக அதிகம் என்பது அங்கு சென்ற பின்புதான் தெரிந்தது. காசாவில் நீங்கள் அறிவிப்புப் பலகைகளை ஹீப்ரூவிலும் காணலாம். (அங்கு கஞ்சா மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்பது கொசுறுச் செய்தி)

கீ பற்றி ஆரம்பித்து விட்டு இன்னும் அதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. அடுத்த பதிவில் முழுமையாக சொல்கிறேன். இப்பொழுது சில படங்கள் மற்றும் சில செய்திகள்.

டெல்லி – ஸ்பிடி (லாகுல் அல்ல) – டெல்லி

டெல்லி – மனாலி – காசா – கீ – கிப்‌பர் – டொங்கர் – தபு – சிம்லா – டெல்லி

மொத்த செலவு – 9000 ரூ

நாட்கள் – 10 நாள் 9 இரவு

மாதம் – செப்டெம்பர் 2011

வாகனம் – பேருந்து மட்டும்.

4

மேல் உள்ள படத்தில் இருக்கும் கிராமத்திற்கு செல்லும் ஒரே வழி இதோ.. இதை விட்டால் 40 கிலோமீட்டர் நடக்க வேண்டும்.

5

இந்த பகுதியில் உள்ளவர்கள் கயிற்றைப் பிடித்து இழுக்க இது நகரும் – கீழே 400 மீட்டர் குழி அல்லது பள்ளத்தாக்கு.

6

7

மனாலி டூ காசா – 125 ரூ

காசா தங்குமிடம் – 150 டு 200 ரூ

காசா டூ கீ – 25 ரூ (பேருந்து) 15 கிமீ தோராயமாக

கீ தங்குமிடம் – கீ கோம்ப்பா 150 டு 400 ரூ; கெஸ்ட் ஹௌஸ் – 150 ரூ முதல்.]

இமயம் – 3

8

1000 ஆண்டு பழமையான கீ கோம்ப்பா, ஸ்பிடி நதிக்கரையில் அமைந்துள்ளது. இதுவே புத்த பிட்சுகளின் மத ரீதியான பாடங்களின் தலைமைச் செயலகம் ஆகும்( லாஹௌல் மற்றும் ஸ்பிடி). இங்குள்ள பிக்குகள் நடந்தே திபெத் செல்வதும் உண்டு. லடாக் – குலு இடையே ஏற்பட்ட சண்டைகளினாலும், மங்கோலியர்களின் தாக்குதல்களினாலும் ஏற்பட்ட பாதிப்பு, ஆலயத்தின் சில பகுதிகளில் இன்னும் பிரதிபலிப்பதைக் காணலாம்.

இந்த ஆலயம் இதன் சுவர் சித்திரங்களுக்காக மிகப் பெயர் பெற்றது. புத்தரின் சித்திரம் முதல் ஏறத்தாழ 1000 ஆண்டுகள் பழமையான பௌத்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படங்களும் ஏராளம் உண்டு. இந்த சித்திரங்கள் இருக்கும் அறையை டங்கியுர் (Tangyur) என்று சொல்கிறார்கள். (ஒரு கொசுறு: இந்த ஆலயம் எனக்குத் தெரிய வந்ததே Milerpa படம் பார்க்கும் போது தான். மில்லேர்பாவின் கதை மிக சுவாரசியமான பிளஸ் சிறிது கொடூரமான ஒன்று)

மனாலி – காசா செல்லும் வழியில் காசாவை அடைவதற்கு 12கிமீ முன்பாகவே இதன் ஒரு பக்கத்தைக் காணலாம். எனது பயணத் திட்டம் இஸ்ரேலிய நண்பர்களின் திட்டத்தில் (பொதுவாக என் பயண திட்டத்தைப் பற்றி அப்புறம் சொல்கிறேன்) இருந்து வேறுபட்டு இருந்ததால், அடுத்த நாள் மாலையில் தனியாக ‘கீ’ கிளம்பினேன்.

பேருந்தின் மேற்கூரையில் இருந்து இறங்கிய என்னை சிநேகமான ஜந்து என்று நினைத்து சில இளம் புத்த துறவிகள் சூழ்ந்து கொண்டனர். டெல்லியில் 3 வருடம் இருந்தாலும் நான் ஹிந்தி கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அவர்களின் ஆங்கிலம் புரியும்படி இருந்ததால் பிரச்சினை ஒன்றும் இல்லை. இங்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். பெரும்பாலான வட இந்தியாவில்(கிராமங்களில்) சென்னை என்று சொன்னால் தெரிவதில்லை; மெட்ராஸ் என்றால் தான் தெரிகிறது. இமயத்தை விட நான் அமிர்தசரசில் இதை நன்றாக உணர்ந்தேன். இந்த மெட்ராஸ்ஐ வைத்தே நிறைய சுவாரசியமான அனுபவங்கள். பிறிது பார்ப்போம்.

ஆசைக்கு ஆசைப்படாத ஆலயத்தின் தங்கும் இடத்தின் விலையை ஏற்றி விட்டதால் (Satellite TV connection உண்டு. இந்த TV பற்றி லடாக் பகுதியில் பார்க்கலாம்) மிகக் குறைந்த வசதி உடைய (tap இல் வெந்நீர் வராது ஆனால் 10ரூ ௧ வாளி கிடைக்கும். இதைப் பற்றி விரிவாக Zanskar பகுதியில் பார்க்கலாம்) அறையை வாடகைக்கு எடுத்தேன். வேறு அறை தேட அப்பொழுது நேரம் இல்லை. உணவகத்தில் கிடைத்த சிக்கன் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டு (சாத்தியமாங்க – புத்த உணவகத்தில் கோழி கறி – வாழ்க வெள்ளையன்கள்) நேரே ஆலயம் சென்றேன்.

மாலை 6 மணிக்கு மேல் அங்கு பார்வையாளர்களை அனுமதிப்பது இல்லை – குறிப்பாகப் பெண்களை. ஆனால் பெண் துறவிகளுக்கென்று தனியாக மடாலயத்தில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண் துறவிகளுக்கும் தான். முன்பு இந்த அறைகளே பார்வையாளருக்கான தங்குமிடமாக இருந்தது. பின்னர் அதில் நிறைய சிக்கல்கள் வந்ததால் நிறுத்தப்பட்டதாக பிட்சு ஒருவர் சொன்னார்.

வாழ்வின் உன்னத தருணங்கள் என்று நாம் நினைக்கும் பல நிமிடங்கள் அது நடந்து முடிந்த பின்பு அந்த நேரத்தை அசை போடும் போது கிடைப்பது என்பது பெரும்பான்மை தருணங்களுக்கு பொருந்தும். ஆனால் சில நிமிடங்கள் அது நடந்து கொண்டிருக்கும் போதே நம்மால் உணர முடியும் – காதலி காதலுக்கு சரி என்று சொல்லும் நேரம் போல – என்பதை அன்று நான் ‘கீ’யின் மேற்கூரை அடைந்த பின் உணர முடிந்தது.
கண்கள் பனித்தது; இதயம் இனித்தது என்று ஏதாவது Cliche தனமாக சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை, அதேசமயம் அந்த உணர்வை வேறு எப்படி விளக்குவது என்றும் தெரியவில்லை. அப்படியே நின்று விட்டேன். நகரவில்லை – இல்லை, நகர முடியவில்லை. பேச்சும் வரவில்லை. இயற்கையை அவ்வளவு அழகுடணும், வலிமையுடனும் பார்த்ததால் வந்த விளைவு அது.

9

ஆம். அழகு என்பதன் மொத்த உருவம், பொருள் இமயமலை. என் தந்தை ஒருமுறை என்னிடம் எனது ஓயாத இமயமலைப் பயணம் குறித்து கேட்டது நினைவுக்கு வந்தது. ‘சும்மா போய் ஏன்டா கல்லையே பாத்துட்டு பாத்துட்டு வர?’. அன்று என் தந்தை என்னுடன் பயணித்து வந்திருந்தால் இந்த கேள்வியே வந்து இருக்காது என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

புத்தர் சிலைக்குப் போட்டியாக நான் அசையாமல் இருந்ததைப் பார்த்த ஒரு துறவி என்னிடம் வந்து பேச்சு கொடுத்தார். அது பற்றியும், கீயின் அழகு பற்றியும், கீயை சுற்றி நான் செய்த ட்ரெகிங்க் மற்றும் பூனைகள் பற்றியும் அடுத்த பதிவில் சொல்கிறேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s